மருந்தெதிர்ப்பு
  
Translated

எதிர்நுண்கிருமிகள் (கொல்லிகள், எதிர்பூஞ்சைகள், எதிர்தீநுண்மங்கள், எதிர்ஒட்டுண்ணிகள்) பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருப் பிரிவிலும் பல வித மருந்துகள் இருக்கின்றன.  ஒவ்வொருப் பிரிவும் வெவ்வேறு விதத்தில் இயங்குகின்றன. நுண்கிருமிகள், எதிர்நுண்கிருமிகளை எதிர்த்து பலவிகாரங்களாகத் தோன்றுகின்றன. நுண்கிருமிகளின் எதிர்பாற்றலினால் எதிர்நுண்கிருமிகள் பயனற்றவையாகின்றன. நுண்கிருமிககளை அழிப்பதற்கு முடியாது போகின்றது. மேலும், மனிதர்களுக்கு கிசிச்சை அளிக்க இயலாது போகின்றது.

 

பன்மருந்தெதிர்ப்பு — குறைந்தது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவுகளில் ஒரு வகை மருந்தையாவது தடுக்கும் திறன் கொண்ட கிருமிகள். இவ்வாறு எதிர்க்கும் கிருமிகளைப் பெருங்கிருமிகள் என்று அழைக்கிறோம்.

 

விரிவான மருந்தெதிர்ப்பு — பெரும்பாலான மருந்துகளைத் தடுக்கும் திறன் கொண்ட கிருமிகள். ஒன்று அல்லது இரண்டு பிரிவுகளில் உள்ள மருந்து மட்டுமே பயன்படுத்த முடியும். இவ்வாறு எதிர்க்கும் கிருமிகளைப் தீவிரக்கிருமிகள் என்று அழைக்கிறோம்.


சகல மருந்தெதிர்ப்பு — எல்லா மருந்துகளையும் தடுக்கும் திறன் கொண்ட கிருமிகள். இக்கிருமிகளை அழிக்க முடியாது. இவ்வாறு எதிர்க்கும் கிருமிகளைப் கடூரக்கிருமிகள் என்று அழைக்கிறோம்.

 

“எல்லா மருந்துகளையும் எதிர்க்கும் திறனைக் கொண்ட நுண்ணுயிரிகள் ஆபத்தானவை. அவை பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன. ஏனெனில் அவை எல்லா வகையான கொல்லிகளுக்கும் எதிர்ப்புக் கொடுக்கும்.”

 

“எல்லா மருந்துகளையும் எதிர்க்கும் திறனைக் கொண்டதால் காசநோய்க்கு சிகிச்சையளிக்க புதிய விதிமுறைப்படி 9 முதல் 11 மாதங்கள் ஆகும்”

 

“குறிப்பாக, நோயாளிகள் சிகிச்சையை முழுமையாக முடிக்கவில்லை என்றால் மலேரியா ஒட்டுண்ணிகள் முதன்முதலில் இருக்கும் மருந்துகளுக்கு எதிர்ப்பை வெகுவேகமாக உருவாக்கும்.”

 

"அதிகரித்த நச்சுத்தன்மைகளும் பன்மருந்தெதிர்ப்பும் இணைந்து தற்போதைய நிலைமையை மோசமாக்குகிறது."

 

Learning point

பன்மருந்தெதிர்ப்பு மனிதனால் உருவாக்கப்பட்ட சிக்கல்

 

பன்மருந்தெதிர்ப்பு மனிதனால் உருவாக்கப்பட்ட சிக்கல்களில் ஒன்று. எடுத்துக்காட்டாக, முறையற்ற முறையில் காசநோய் கொல்லிகளைப் பயன்படுத்துவதனால், பெருங்கிருமி காசநோய் உருவாகத்திற்குக் காரணமாக அமைந்தது.[1] காசநோய் சிகிச்சை நீண்ட 6 முதல் 9 மாதங்கள் தேவைப்படுவதாலும் பக்க விளைவுகளாலும் கொல்லிகளைத் தவறாகப் பயன்படுத்துவது சாதாரணமாகிவிட்டது. நோயாளிகள் கொஞ்சம் சரியாகிவிட்டால் அவர்கள் மருந்து எடுத்துக்கொள்வதை நிறுத்திவிடுகிறார்கள். மருந்து சாப்பிடுவதை நிறுத்துவது தவறாகும். காசநோய் நுண்ணுயிரிகள் இன்னும் உடலில் இருந்து அழிக்கப்பட்டிருக்காது. உடலில் இருக்கும் இந்நுண்ணுயிரிகள் நோயாளி ஏற்கனவே எடுத்த முதல் சுற்று மருந்துகளுக்கு எதிர்ப்பை உருவாக்கி கொள்ளும். இந்நோயாளிகளுக்கு மீண்டும் காசநோய் வரும்பொழுது இந்நுண்ணுயிரிகளை முதல் சுற்று மருந்துகளால் அழிக்க முடியாது. அது மற்றுமில்லாமல் சுலபமாக பரவக்கூடிய தொற்றுநோயாகி மரணத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

 

பன்மருந்தெதிர்ப்பு ஆற்றல் கொண்ட நுண்ணுயிரி குடும்பங்களில் ஒன்று கார்பபெனெம்-எதிர்க்கும் எண்டெரோபெக்டீரியேசி (சி.ஆர்.இ, carbapenem-resistant Enterobacteriaceae, CRE,). பெரும்பாலான கொல்லிகளால் அவற்றை அழிக்க முடியாத வகையில் உருவாகியுள்ளன எனக் குறிப்பிடப்படுகிறது. இதனால், சி.ஆர்.இ நுண்ணுயிரிகளைப் பெருங்கிருமி அல்லது சூப்பர்பக் என்று அழைக்கப்படுகிறது. அந்திம கொல்லி கோலிஸ்டின் (Colistin) சி.ஆர்.இக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது.  இதைத்தவிர மற்ற பன்மருந்தெதிர்ப்பு நுண்ணுயிரிகளுக்கும் கோலிஸ்டின் பயன்படுகிறது.   மருத்துவமனைகளிலும் குமுகாயத்திலும் கொல்லிகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் சி.ஆர்.இ போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. சி.ஆர்.இ போன்ற பன்மருந்தெதிர்ப்பு நுண்ணுயிரிகள் பலருக்குப் பரவி பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

 

பன்மருந்தெதிர்க்கும் எஸினெட்டோபெக்டர் (MDR Acinetobacter) சுகாதார அமைப்புகளில் முக்கியமான நுண்ணுயிரிகள். வரலாற்று ரீதியாக, கார்பபெனெம் கொல்லிகள் எஸினெட்டோபெக்டரால் ஏற்படும் நோய்களுக்குச் சிறந்த சிகிச்சையை அளித்துள்ளன. கொல்லிகளை முறையற்ற வகையிலும் அளவுக்கு அதிகமாகவும் பயன்படுத்தியதால் கார்பபெனெம்-எதிர்க்கும் எஸினெட்டோபெக்டர் வளர்ச்சிக்கும் பரவுவதற்கும் காரணமாகிவிட்டது. பன்மருந்தெதிர்க்கும் எஸினெட்டோபெக்டர் கடுமையான நோய்களை ஏற்படுத்தும். சிகிச்சையளிப்பதும் கடினம்.

 

இப்பன்மருந்தெதிர்க்கும் சிக்கலைச் சமாளிக்க மருத்துவமனைகள் அவர்களின் நலவியல் முறைகளையும் விதிகளையும் மேம்படுத்த வேண்டும். நோயாளிகளைத் தொடுவதற்கு முன்பும் பின்பும் அனைவரும் கைகளைக் கழுவுவதை உறுதி செய்தல் வேண்டும். கொல்லிகள் மேலாண்மை திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். குமுகாயத்தில் மக்கள் அனைவரும் அடிக்கடி கைகளைக் கழுவி தங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் எதிர்நுண்கிருமிகளை அளவுக்கு மீறியோ தவறாகவோ பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

 

ஆதார நூற்பட்டியல்

[1]    ஹூபர், சி. (2017, மார்ச் 20). பன்மருந்தெதிர்ப்பு ஆற்றல் கொண்ட காசநோய்க்கான காரணங்கள். போர்கன் திட்டம். வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது

Huber, C. (2017, March 20). The Causes of Multi-Drug Resistant Tuberculosis. The Borgen Project. Retrieved from

https://borgenproject.org/causes-multi-drug-resistant-tuberculosis/

Related words.
Word of the month
New word