இரத்தநச்சுப்பாடு
  
Translated

தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரினங்கள் குருதியில் புகுந்து இனப்பெருக்கம் செய்யும் போது நமது உடல் நோயெதிர்ப்பு அமைப்பு அவற்றுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றன. படையெடுக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராட நோயெதிர்ப்பு அமைப்பு இரசாயனங்களை நம் உடல் இரத்த ஓட்டத்தில் வெளியிடுகிறது. இந்த ரசாயனங்கள் இரத்த அழுத்தத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. இதைத்தான் இரத்தநச்சுப்பாடு/குருதிநச்சுப்பாடு/குருதிநஞ்சடைதல் என்று பல பெயர்களில் அழைக்கிறோம்.  இது முக்கிய உடல் உறுப்புகளுக்குச் சேதத்தை ஏற்படுத்தும். கடுமையான சந்தர்ப்பங்களில் பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழக்கவும் அதிர்ச்சி அடையவும் செய்கின்றது. மேலும், உயிர் இழப்புக்கும் வழிவகுக்கும்.

 

"ஆண்டுதோறும் குறைந்தது 1.5 மில்லியன் மக்கள் இரத்தநச்சுப்பாட்டால் பாதிக்கப்படுகிறார்கள் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டுத் தடுப்பு மையம் (சி.டி.சி) தகவல் வெளியிட்டுள்ளது. இந்த 1.5 மில்லியன் மக்களில் 250,000 பேர் உயிரை இழக்கிறார்கள்."

 

“உலகளவில் ஆண்டுதோறும் குறைந்தது ஆறு மில்லியன் இறப்புகளுக்கு இரத்தநச்சுப்பாடு காரணமாக அமைகிறது. உலகின் பல பகுதிகளில், 50 சதவீதத்துக்கும் மேலானோர் இரத்தநச்சுப்பாடு பற்றி அறியாமல் இருக்கின்றனர்.”

Learning point

இரத்தநச்சுப்பாடு விழிப்புணர்வை உயர்த்துதல்

உடல் இரத்த நுண்கிருமிகளை எதிர்த்துப் போராடும் போது உடலில் இரத்தநச்சுப்பாடு ஏற்படுகிறது. இரத்தநச்சுப்பாடு ஏற்படும்போது அவசர சிகிச்சை தேவைப்படுகிறது. ஏனென்றால், இரத்தநச்சுப்பாடு உடல் உறுப்புகளின் செயலிழப்பு அல்லது மரணத்தை ஏற்படுத்துகின்றது.

 

இரத்தநச்சுப்பாடு ஆண்டுக்கு சுமார் 30 மில்லியன் மக்களைப் பாதிக்கிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் ஆறு முதல் ஒன்பது மில்லியன் இறப்புகளை ஏற்படுத்துகிறது. இவற்றில் பெரும்பாலானவைத் தடுக்கக்கூடியவை.[1] பெரும்பாலான நுண்கிருமிப்பிணிகள் இரத்தநச்சுப்பாட்டுக்கு வழிவகுக்கும். அவற்றில் கபவாதம், சிறுநீர் பாதைப்பிணி, வயிற்றுப்பிணி, தோல்ப்பிணி, காயம், மூளைக்காய்ச்சல் போன்ற பொதுவான நோய்களும் அடங்கும். பருவகால சளிக்காய்ச்சல், காட்டுக் காய்ச்சல், டெங்கே (டெங்கு), மஞ்சள்காமாலை, இபோலா போன்ற நோய்களும் இரத்தநச்சுப்பாட்டுக்குக் காரணமாக இருக்கலாம்.[2]

 

இரத்தநச்சுப்பாட்டுக்கு வழிவகுக்கும் 80 சதவீதத்திற்கும் அதிகமான நுண்கிருமிப்பிணிகள் மருத்துவமனைக்கு வெளியே தொற்றிக்கொள்கின்றன. யாருக்கு வேண்டுமானாலும் இரத்தநச்சுப்பாடு ஏற்படலாம். இரத்தநச்சுப்பாடு ஆபத்தான நோய் என்பதால் உயிர்வாழ்வதற்கு விரைவாக தகுந்த முறையில் சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.

 

இந்த ஆபத்தான இரத்தநச்சுப்பாடு நோயைப்பற்றி அடிக்கடி பேசப்படுவதில்லை. பற்றாக்குறைக்குப் பெரும்பாலும் "இரத்த நஞ்சு/விஷம்" என்று தவறாகக் குறிப்பிடப்படுகிறனர்.[3] நுண்கிருமிப்பிணிகளால் மக்கள் இறப்பதைப் பற்றிய கதைகளை நாங்கள் கேள்விப்படுகிறோம், ஆனால், பெரும்பாலும் இறப்புக்கு முக்கிய காரணம் இரத்தநச்சுப்பாடு ஆகும். மக்கள் இதைப் பற்றி கேட்காததற்குக் காரணம், “இரத்தநச்சுப்பாடு” என்ற வார்த்தையைப் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. இரத்தநச்சுப்பாட்டைத் தடுப்பதற்கான எளிதான வழி, முதலில் நுண்கிருமிப்பிணிகளைத் தவிர்க்க வேண்டும். இதைத் தடுப்பூசி போடுவதன் மூலமும் அடிப்படை தூய்மையைப் பேணுவதன் மூலமும் தவிர்க்கலாம். இரத்தநச்சுப்பாட்டுக்கு வழிவகுக்கும் நுண்கிருமிப்பிணிகளைத் தடுப்பதற்கு, விரைவாக நோய்நாடி பொருத்தமான எதிர்நுண்கிருமிகளைக்கொண்டு சிகிச்சையளிக்க வேண்டும். இரத்தநச்சுப்பாட்டை முன்கூட்டியே கண்டுபிடித்துச் சிகிச்சையளிப்பதால் உயிர்களைக் காப்பாற்றலாம்.

 

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டுத் தடுப்பு மையத்தின் (சி.டி.சி) பரிந்துரைப்படி இரத்தநச்சுப்பாட்டின் அறிகுறிகள்,[4]

 

- குழப்பம் அல்லது கவனச்சிதறல் 

- மூச்சுத் திணறல்

- அதிக இதயத் துடிப்பு

- அதிக காய்ச்சல், அல்லது நடுக்கம், அல்லது மிகவும் குளிராக உணர்வது 

- அதிக வலி அல்லது அசௌகரியம்

- மிகுந்த ஈரம்/வியர்வை உள்ள தோல்

 

விரைவாகச் சிகிச்சையளிக்காவிட்டால், இந்த அறிகுறிகள் மோசமடைந்து இரத்தநச்சுப்பாடு உடல் உறுப்புகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தும். ஒருவருக்கு நுண்கிருமிப்பிணி இருந்து, இந்த இரத்தநச்சுப்பாட்டு அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரைக் காண வேண்டும் அல்லது மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையத்திற்குச் செல்ல வேண்டும். இரத்தநச்சுப்பாட்டில் இருந்து தப்பியவர்கள் அதன் விளைவுகளினால் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்படுவார்கள். இரத்தநச்சுப்பாட்டின் தகவல்களைப் பற்றி மேலும் படிக்க இவ்வலைத்தளத்திக்குச் செல்லுங்கள்: https://www.sepsis.org/faces/.

 

இரத்தநச்சுப்பாடு பற்றிய கூடுதல் தகவலுக்கு, தயவுசெய்து இவ்வலைத்தளங்களைப் பார்வையிடவும்:

 

- உலக இரத்தநச்சுப்பாடு தினம்: https://www.world-sepsis-day.org/sepsis

- உலகளாவிய இரத்தநச்சுப்பாட்டுக் கூட்டணி: https://www.global-sepsis-alliance.org/sepsis/

- இரத்தநச்சுப்பாட்டுக் கூட்டணி: https://www.sepsis.org/faq/

 

ஆதார நூற்பட்டியல்

[1]     உலக இரத்தநச்சுப்பாடு தினம். இவ்வலைத்தளத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டது.

         World Sepsis Day. Sepsis. Retrieved from https://www.world-sepsis-day.org/sepsis

[2]     இரத்தநச்சுப்பாடு என்றால் என்ன?  (இரத்தநச்சுப்பாடு 3 நிமிடங்களில் விளக்கப்பட்டுள்ளது) – ஆங்கிலத்தில். இவ்வலைத்தளத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டது.

What is sepsis (sepsis explained in 3 minutes) - in English. Retrieved from https://www.world-sepsis-day.org/sepsis

[3]     இரத்தநச்சுப்பாடு மற்றும் இரத்தநச்சுப்பாடு கூட்டணி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள். இவ்வலைத்தளத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டது.

Frequently Asked Questions About Sepsis and Sepsis Alliance. Retrieved from: https://www.sepsis.org/faq/

[4]     அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டுத் தடுப்பு மையம் (சி.டி.சி) (2017, ஆகஸ்ட் 31). முன்குறி கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளிக்குமாறு சி.டி.சி வலியுறுத்துகிறது. இவ்வலைத்தளத்திலிந்து மீட்டெடுக்கப்பட்டது.

Center for Disease Control and Prevention (2017, August 31). CDC urges early recognition, prompt treatment of sepsis. Retrieved from https://www.cdc.gov/media/releases/2017/p0831-sepsis-recognition-treatment.html

 

Related words.
Word of the month
New word