நுண்கிருமிப்பிணிகள்
  
Translated

நுண்கிருமிப்பிணிகள் — நோயை உண்டாக்கும் நுண்ணுயிரினங்களால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அதை நுண்கிருமிப்பிணி என்று அழைக்கிறோம். நுண்ணுயிரிகள், தீநுண்மங்கள், பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள் ஆகியவை பிணிகளுக்குக் காரணமாய் இருக்கும் கிருமிகள். எல்லா நுண்கிருமிப்பிணிகளும் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவுவது கிடையாது. மனிதர்களிடையே பரவும் நுண்கிருமிப்பிணிகளைத் தொற்று நோய் என்று அழைக்கிறோம். சில நுண்கிருமிப்பிணிகள் விலங்குகளாலும் பூச்சிகளாலும் ஏற்படுகின்றன.


அசர சரா-சரமங்கள் / தொடுபொருட்கள் — உயிரற்ற அசையும் அசையாத பொருட்கள், வெளிப்பரப்பிலிருக்கும் நுண்கிருமிகளை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குக் கடத்தும் தன்மை கொண்டவை. எடுத்துக்காட்டு: உடைகள், பாத்திரங்கள், தளவாடங்கள், கதவுகள் ஆகும்.

 

“சாதாரண தடிமனும் சளிக்காய்ச்சலும் தீநுண்மங்களால் உண்டாகும் நோய்கள். பாதிக்கப்பட்டோர் தொண்டை வலி, இருமல், தும்மல், லேசான காய்ச்சல் ஆகிய உபாதைகளை அனுபவிப்பர்.”

 

“நுண்கிருமிப்பிணிகளைத் தடுப்பது அனைவரின் கடமையாகும். நோயாளிகள் சுகாதாரப் பராமரிப்ப்பில் இருக்கும்போது அவர்கள்தம் குடும்பத்தினர் சுத்தமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.”

Learning point

உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் நுண்கிருமிப் பிணிகளிருந்து எவ்வாறு பாதுகாக்க முடியும்?

 

நோயை உருவாக்கும் நுண்ணுயிர்கள், தீநுண்மங்கள், ஒட்டுண்ணிகள், பூஞ்சைகள் ஆகியவை உடலில் நுழைந்து பெருகத் தொடங்கும் போது நுண்கிருமிப்பிணிகளுக்கு ஆளாகின்றனர். இப்பிணிகளைத் தடுப்பூசி (தடுப்பு மருந்து) மூலம் தடுக்கலாம். குமுகப்பிணிகளைத் தவிர்க்க நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பின்வரும் பரிந்துரைகளை நினைவில் கொள்ள வேண்டும்:[1]

 

# 1. நுண்கிருமிப்பிணிகள் எவ்வாறு பரவுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

மூக்கு, வாய், காதுகள், ஆசனவாய், பிறப்புறுப்பு போன்ற வாயில்கள் மூலம் பெரும்பாலான நுண்கிருமிகள் நம் உடலில் நுழைகின்றன என்பதை நாம் அறிவோம். நுண்கிருமிகள் பூச்சி அல்லது விலங்குகளின் கடி வழியாகவும், அசர சரா-சரமங்களிலிருந்தும் நம் தோல் வழியாகவும் பரவுகின்றன. நுண்கிருமிகள் காற்றிலிருந்தும் பரவுகின்றன. எனவே, நுண்கிருமிப்பிணிகளைத் தடுப்பதற்கான சிறந்த வழி, அந்த நுண்கிருமிகள் நம் உடலுக்குள் நுழைவதைத் தடுப்பதாகும்.

 

# 2. உங்கள் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

உணவு தயாரிப்பதற்கு முன்னும் பின்னும், சாப்பிடுவதற்கு முன்பும், இருமல் தும்மல் ஏற்பட்ட பிறகும், விலங்குகளுடன் வெளியில் விளையாடியப் பிறகும், கழிப்பறையைப் பயன்படுத்திய பின்னரும் கைகளைக் கழுவுவது அவசியமாகின்றது.

 

# 3. தடுப்பூசி போடுங்கள்.

தடுப்பு மருந்துகள் பல நுண்கிருமிப்பிணிகள் தொற்றுவதையும் பரவுவதையும் தடுக்கின்றன. உங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டத் தடுப்பூசிகளைப் புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள்.

 

# 4. கொல்லிகள் தேவைப்படும்போது மட்டுமே பயன்படுத்துங்கள்.

பரிந்துரைக்கப்படும் போது மட்டுமே கொல்லிகளை எடுத்துக் கொள்ளுங்கள். கொல்லிகளைப் பரிந்துரைக்க உங்கள் மருத்துவர்களுக்கு நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டாம்.[2] "நான் ஏன் கொல்லிகளை எடுத்துக்கொள்கிறேன்?" என்று மருத்துவரைக் கேட்க வேண்டும், இதன் மூலம் உங்கள் பகுத்தறிவைச் சரிபார்க்க முடியும்.[3] ஒவ்வாமை இருந்தாலோ மருத்துவர் நிறுத்த சொன்னாலோ தவிர முடிப்பதற்கு முன்பே நீங்கள் குணமடைந்ததாக உணர ஆரம்பித்தாலும் பரிந்துரைக்கப்பட்ட கொல்லிகள் அனைத்தையும் முடிக்க வேண்டும்.

 

# 5. நுண்கிருமிப்பிணிகளின் அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே இருங்கள்.

உங்களுக்கு இருமல், காய்ச்சல், வாந்தி, அல்லது வயிற்றுப்போக்கு இருந்தால் வேலைக்கோ அல்லது வகுப்புக்கோ செல்லாதீர்கள்.

 

# 6. தீநுண்மப்பிணிக்கு (சாதாரண தடிமன், சளிக்காய்ச்சல் போன்றவை) ஆளாகினால் முகக்கவசம் அணியுங்கள். அது முடியாவிட்டால், நீங்கள் தும்மும்போதும் இருமும்போதும் உங்கள் வாயையும் மூக்கையும் மெல்லிழைத்தாள் அல்லது முழங்கையால் மூடவும்.

நோய்வாய்ப்பட்டிருக்கும் போது இருமினாலோ தும்மினாலோ தீநுண்மங்கள் நிறைந்த உமிழ்நீர் துளிகள் காற்றில் வெளியேற்றப்படுகின்றன. இந்தத் தீநுண்மங்கள் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பரவி அவர்களையும் பாதிக்கும். உங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது முகக்கவசம் அணிவது மற்றவர்களுக்குக் கிருமிகள் பரவாமல் தடுப்பதற்கானச் சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

 

பல ஆசிய நாடுகளில் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது முகக்கவசம் அணியும் கலாச்சாரம் மற்ற நாடுகளுக்குப் பரவவில்லை. இந்த நடைமுறை பொதுவானதல்ல என்பதால், வெளியில் முகக்கவசம் அணிந்திருப்பதை நீங்கள் வினோதமாக உணரலாம். இருப்பினும், நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் முகக்கவசத்தை அணியுமாறு பரிந்துரைக்கிறோம். அது முடியாவிட்டால், நீங்கள் தும்மும்போதும் இருமும்போதும் உங்கள் வாயையும் மூக்கையும் ஒரு மெல்லிழைத்தாளில் மூடி, பின்னர் அதைச் சுகாதார முறையில் அப்புறப்படுத்துங்கள். எந்த மெல்லிழைத்தாளும் எளிதில் கிடைக்காவிட்டால், நீங்கள் தும்மும்போதும் இருமும்போதும் உங்கள் வாயையும் மூக்கையும் உங்கள் முழங்கையால் மூடவும்.

 

# 7. உணவு தயாரிப்பதில் புத்திசாலித்தனமாக இருங்கள்.

உணவைத் தயாரிக்கும் போது சமையலறை மேற்பரப்புகளைச் சுத்தமாக வைத்திருங்கள். கூடுதலாக, எஞ்சியவற்றை உடனடியாக குளிர்ப்பதனப் பெட்டியில் வைக்கவும். சமைத்த உணவுகளை அறை வெப்பநிலையில் நீண்ட நேரத்திற்கு வைக்காதீர்.

 

# 8. சமைத்த உணவை உண்ணுங்கள், சுத்தமான தண்ணீரை அருந்துங்கள்.

சமைக்கப்படாத உணவுகளையும் அசுத்தமான காய்கறிகளையும் சாப்பிடுவது வயிற்றுப்போக்குப் போன்ற நுண்கிருமிப்பிணிகளின் ஆபத்தை அதிகரிக்கும். பல நாடுகளில், குழாய் நீர் இன்னும் நுண்ணுயிர்களால் மாசுபட்டுள்ளது. குடிப்பதற்கு முன்பு தண்ணீரைக் கொதிக்க வைப்பது நல்லது.

 

# 9. பூச்சிகளைத் தவிர்க்கவும்

கொசுக்களும் உண்ணிகளும் தீநுண்மங்கள், நுண்ணுயிர்கள், ஒட்டுண்ணிகள் ஆகியவற்றுடன் வாழ்கின்றன. வெளிப்புற வேலைகளின் போது பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்துங்கள். கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்க உங்கள் வீட்டிற்கு அருகில் தேங்கி நிற்கும் நீரைத் தூய்மைப்படுத்த வேண்டும். கரப்பான் பூச்சிகளைத் தடுக்க பூச்சி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

 

# 10. பால்வினை நோய்களைத் (எஸ்.டி.டி) தடுக்கவும்

பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ள வேண்டாம். பாலியல் தொடர்பில் ஈடுபட்டால் ஆணுறைகளைப் பயன்படுத்துங்கள். எச்.ஐ.வி மற்றும் பிற பால்வினை நோய்களுக்குப் (எஸ்.டி.டி) பரிசோதனைகளை மேற்கொள்ளவும். உங்கள் துணைவர், பரிசோதனைகளை மேற்கொள்ள செய்யுங்கள் அல்லது உடலுறவு கொள்வதிலிருந்து விலகி இருங்கள்.

 

ஆதார நூற்பட்டியல்

[1]        மாயோ சிகிச்சையகம். (2017மார்ச் 08). கிருமிகள்: நுண்ணுயிர்கள் தீநுண்மங்கள் மற்றும் நுண்கிருமிப்பிணிகளிலிருந்து பாதுகாக்கவும். இவ்வலைத்தளத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டது.

Mayo Clinic. (2017, March 08). Germs: Protect against bacteria, viruses and infection. Retrieved from https://www.mayoclinic.org/diseases-conditions/infectious-diseases/in-depth/germs/art-20045289

[2]        நாப்டன், எஸ். (2015, ஆகஸ்ட் 18). கொல்லிகளை அதிகமாக பரிந்துரைக்கும் 'மென்மையான தொடு' மருத்துவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். இவ்வலைத்தளத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டது.

Knapton, S. (2015, August 18). 'Soft touch' doctors should be disciplined for over-prescribing antibiotics. Retrieved from

https://www.telegraph.co.uk/news/science/science-news/11808015/Soft-touch-doctors-should-be-disciplined-for-overprescribing-antibiotics.html

[3]        லாலிபெர்டே, எம். (2017 பிப்ரவரி 9). கொல்லிகளை எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் கேட்க வேண்டிய 12 அத்தியாவசியக் கேள்விகள். இவ்வலைத்தளத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டது.

Laliberte, M. (2017 February 9). 12 Essential questions to ask your doctor before taking antibiotics. Retrieved from https://www.rd.com/health/conditions/antibiotics-side-effects-questions/#card-1/

 

 

Related words.
Word of the month
New word